கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட அக்கட்சியினர் விரும்பிய நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக குழு கோரியதாக தெரிகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 2இல் வென்றது. 2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட அக்கட்சியினர் விரும்பிய நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக குழு கோரியதாக தெரிகிறது.
இதன் காரணமாக இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று காலை கூடியது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை மாநில குழு கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இரவு உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் மாநில செயற்குழு கூட்டம் சுமார் 2 மணி நேரம் அளவுக்கு நடைபெற்றது.
நள்ளிரவு வரை நடைபெற்ற கூட்டத்தில், கடந்த தேர்தலைப் போல் இந்த முறையும் 6 தொகுதிகளை கேட்டுப் பெற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து நிர்வாகிகளின் முடிவை தெரியப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு