கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் குழுவினர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநிலங்களவை சீட் ஒதுக்குவது உறுதி, தொகுதி பங்கீடு விரைவில் முடிவு எதிர்பார்ப்பு.
திமுக தங்களுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவதை உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் மாதமே, அக்கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவை அமைத்தது. 3 மாதங்களாக திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் காத்திருந்த நிலையில் இன்று திமுக அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் 4 பேர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அவர்களுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து நியூஸ் 18க்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், விருப்ப தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கி உள்ளதாக கூறினார்.
2 நாட்களில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என்றும் சோடங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் என கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இந்த கோரிக்கையை திமுகவிடம் காங்கிரஸ் முன்வைத்துள்ளதாகவும், மாநிலங்களவை சீட் வேண்டும் என்றால் மார்ச் 2 ஆம் தேதிக்குள் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியை திமுக வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.