கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Asha Bhosle | கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரர் பாடகர் ஆஷா போஸ்லே. அவர் பாடிய தமிழ் பாடல்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பழம்பெரும் பாடகர் ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய இசை உலகில் 70 ஆண்டுகளுக்கும் மேல் பாடகராக கோலோச்சியவர் ஆஷா போஸ்லே. ஆயிரக்கணக்கான பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். 2 தேசிய விருதுகள், தாதா சாகேப் பால்கே, பத்ம விபூஷண், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்றவர் ஆஷா போஸ்லே.
தமிழில் ஆஷா போஸ்லே சில பாடல்களை மட்டுமே பாடியிருந்தாலும், அவை காலத்தால் அழியாத பாடல்கள். கடந்த 1987-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே செண்பகமே’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆஷா போஸ்லே.
அதேபோல, கடந்த 2000-ம் ஆண்டு கமல் இயக்கி நடித்த ‘ஹேராம்’ படத்தில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலை பாடியிருந்தார். மெல்லிய இசையில் வருடும் ஆஷா போஸ்லேவின் குரல் இன்று கேட்டாலும் ரசிக்க வைக்கும். நிகழ்காலத்தை மறக்கடிக்கச் செய்யும் இந்தப் பாடலுக்கு இளையராஜாவின் இசை ஹைவோல்டேஜ்.
அதே 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மாதவன் நடிப்பில் வெளியான ‘அலைபாயுதே’ படத்திலும் ஹிட்டான ‘செப்டம்பர் மாதம்’ பாடலை ஆஷா போஸ்லே பாடியிருந்தார்.
1990-ம் ஆண்டு மீரா படத்தில் இடம்பெற்ற ‘ஓ பட்டர்ஃப்ளை’ என்ற பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்தார் ஆஷா போஸ்லே. இளையராஜா இசையில் உருவான இந்தப் பாடல் க்ளாசிக்.
1997-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘நேருக்கு நேர்’ படத்தில் ‘எங்கெங்கே’ பாடலில் தனது கொஞ்சும் குரலால் அழகு சேர்த்திருப்பார் ஆஷா போஸ்லே. தேவா இசையில் இந்தப் பாடல் மாபெரும் ஹிட்டடித்தது.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சேதுபதி ஐபிஎஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘சாத்து நட சாத்து’ பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடியிருப்பார் ஆஷா போஸ்லே.
ரஜினியின் சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ பாடலை கொஞ்சி கொஞ்சி பாடியிருப்பார் ஆஷா போஸ்லே.
மேலும், ’இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலா வெண்ணிலா’ பாடலையும், ‘நான் சொன்னதே சட்டம்’ படத்தில் இடம்பெற்ற அதிகாலை நேரம் பாடலை பாடி கவனம் பெற்றார்.