கூட்டம் தாங்கல.. பிளான் சேஞ்ச்! இந்தியா AI மாநாடு நீட்டிப்பு.. எப்போ வரைக்கும் தெரியுமா?



AI Impact Summit மக்கள் அமோக வரவேற்பை அடுத்து இந்தியா AI உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணை மற்றும் அனுமதி விவரங்களை இங்கே காணுங்கள்.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ‘இந்தியா AI இம்பாக்ட் உச்சி மாநாடு 2026’ (India AI Impact Summit 2026), பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுவதால், இந்த மாநாட்டை மேலும் ஒரு நாள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த மாநாடு, தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் வசதிக்காகக் கண்காட்சி நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 6 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், இனி இரவு 8 மணி வரை மாநாடு திறந்திருக்கும்.

• பிப்ரவரி 19 (வியாழன்): உயர்மட்ட நிகழ்வுகள் காரணமாகப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

• பிப்ரவரி 20 மற்றும் 21 (வெள்ளி & சனி): பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முழு அனுமதி வழங்கப்படும்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டிற்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 2.5 லட்சம் பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. இது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது" என்றார். சுந்தர் பிச்சை (Google), பில் கேட்ஸ் (Microsoft) போன்ற உலகத் தலைவர்கள் பங்கேற்றது இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து மக்கள் குவிந்ததால், ஆன்லைன் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. "தளத்தின் கொள்ளளவை விட அதிகமானோர் ஆர்வம் காட்டுவதால், பதிவுகள் நிரம்பிவிட்டன (Oversubscribed)" என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நேரில் வருபவர்களுக்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு, "மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம்" (People, Planet, and Progress) என்ற மூன்று முக்கியக் கொள்கைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *