Flash News

கவுன்சிலர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை தொடர்ந்து 252 முறை போட்டி: யார் இந்த தேர்தல் மன்னன்? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சேலம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் கவுன்சிலர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை தொடர்ந்து 252 முறை போட்டிட்டுள்ளார்.

+

தேர்தலில்

தேர்தலில் 252 முறைக்கு மேல் போட்டிட்டுள்ள தேர்தல் மன்னன் கே.பத்மராஜன்.

தேர்தல் திருவிழா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது வேட்பாளர்கள்தான். அதிலும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தளவுக்கு பிரபலம் அடைந்தாலும் அதிகபட்சம் 10 முறைக்கு மேல் போட்டியிடுவதே பெரிய விஷயம் ஆகும். ஆனால் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் இதுவரை 252 முறை வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார் என்றால் சற்று பிரமிப்பாக தான் இருக்கிறது. அட ஆமாங்க., சேலம் மாவட்டம், மேட்டூர், குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் 1988 -ம் ஆண்டு முதல் கவுன்சிலர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை போட்டிட்டு உள்ளார். இவருக்கு வயது 67, இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ஹோமியோபதி பட்டப்படிப்பு படித்துள்ள இவர் தற்போது டயர் ரீ-டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.

இவர் இதுவரையிலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, டெல்லி மேல்சபை எம்.பி, எம்.எல்.ஏ. மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல் வரை களம் கண்டுள்ளார். இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மேல்சபை எம். பி. தேர்தலில் இவரது வேட்புமனுக்கள் உரிய பரிந்துரையாளர்கள் இன்றி தள்ளுபடி ஆகிவிடும் என்றாலும், எம்.எல்.ஏ. தேர்தல் உள்பட தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் களம் கண்டுவிடுவார். இவர் குறைந்த ஓட்டுகள் பெற்றாலும் தேர்தலில் அதிகமுறை தோல்வியை தழுவியவர் என்ற சாதனையை படைத்துள்ளதாக ‘லிம்கா’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார். இவர் இதுவரை தேர்தலுக்காக செலவு செய்த டெபாசிட் தொகை மட்டுமே சுமார் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்து உள்ளதாகவும் கூறுகிறார்.

தேர்தல் பயணம் குறித்து தேர்தல் மன்னன் ‘பத்மராஜன்’ தெரிவித்ததாவது; ” நான் ஒரு கூலிக்காரன் தான் எனக்குன்னு பெருசா பின்புலம் எதுவும் கிடையாது. இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் தான் செய்து வருகிறேன். நான் 1988 ஆம் ஆண்டு முதன்முதலாக வேட்பு மனுதாக்கல் செய்தேன். நான் இதுவரையிலும் வாஜ்பாய், அம்மையார் ஜெயலலிதா, கருணாநிதி, கேப்டன் விஜயகாந்த், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். என்னுடைய தேர்தல் பயணமானது 100, 150 ஐ கடந்து தற்போது 252 முறை தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். நான் தோல்வியைக் கண்டு துவண்டு விடுவதில்லை, இதற்கு என்னுடைய மன உறுதியே சான்று. நான் முதன்முதலாக மீன் சின்னத்தில் போட்டியிட்டேன், அதன் பிறகு முரசு, மோதிரம், ஏரோபிளேன், டயர் போன்ற சின்னங்களில் போட்டியிட்டுள்ளேன்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இவரு மனு தாக்கல் மட்டும்தான் செய்கிறாரா இல்லை பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறாரா என்று நீங்கள் கேட்கலாம். நான் பொதுவாக நான் நிற்கும் தொகுதிகளுக்கு சென்று மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவருடைய குறைகளையும் கேட்டறிந்து கொள்வேன். மக்கள் எனக்கு வாக்கு செலுத்துகிறார்களோ இல்லையோ அதைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன். முடிந்தவரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து கொடுப்பேன்.

நான் இதுவரையில் பல்வேறு தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். தற்போது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கு கழக தலைவர் விஜயை எதிர்த்து போட்டியிட உள்ளேன். அவர் எந்தத் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தாலும் அவரை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்து போட்டியிட உள்ளேன். இந்தத் தருணத்தில் எனது குடும்பத்தினருக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியாது. இந்த தருணத்தில் எனது குடும்பத்தாருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். வெற்றியோ தோல்வியோ எனது தேர்தல் பயணம் உயிர் உள்ளவரை தொடரும்” என்கிறார் தேர்தல் மன்னன் பத்மராஜன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *