சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று வயதேயான பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது.
குழந்தையின் தாய் சஞ்சு (அபர்ணதி), அபார்ட்மென்ட் செகரட்டரி ரூபா சுந்தரி (சங்கீதா) என அனைவரும் தேடுதல் வேட்டையில் இறங்க, காளிதாஸ் (பரத்), ஏசி வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) தலைமையிலான காவல் படையும் களத்தில் குதிக்கிறது.
சந்தேகப் பார்வை, அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜூனியர் வக்கீலும் பேச்சுலருமான ஸ்டீபன் (அஜய் கார்த்தி) மீது விழுகிறது. உண்மையில் குழந்தைக்கு என்னாவானது, ஸ்டீபன் குற்றவாளியா என்பதை க்ரைம் த்ரில்லராகச் சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.
“காளிதாஸ்’ பாகம் ஒன்றில் கவனம் ஈர்த்த அதே கதாபாத்திரத்தில் பரத். இந்த முறையும் படத்தைத் தாங்கும் கதாநாயகனாக வராமல், எட்ட நின்று கதை எனும் ஜோதிக்குள் ஐக்கியமாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

ஏசி வைஷ்ணவியாக பவானி ஸ்ரீ, ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக உடல்மொழியில் பலம் சேர்த்தாலும் எந்நேரமும் எல்லோரிடமும் கடுகாக வெடித்துக்கொண்டிருப்பது ஏனோ?!
ஜூனியர் வக்கீலாக குற்றம் சாட்டப்படும் ஸ்டீபன் பாத்திரத்தில் வரும் அஜய் கார்த்திக்கு நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. ரகசியங்கள் பொதிந்த வேடத்தில் சங்கீதா ஒரு சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
அபர்ணதி, அனந்த் நாக், சிறிய வேடத்தில் கிஷோர் என அனைவருமே கூட்டத்தில் காணாமல் போகின்றனர். ஒரே காட்சியில் தோன்றினாலும் பிரகாஷ்ராஜின் அதகளம் தனித்துவம்!